பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் பொது இடங்கள், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. பலர் கரோனா தடுப்பு அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறினர். விதிமுறைகளை மக் கள் பின்பற்றுவதை உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில், ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தன. குறிப்பாக, அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி, டாஸ்மாக் கடைகள் திறப்பு, இ-பாஸ் இன்றி பயணம் என்பன உள்ளிட்ட பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், கோயில்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
குறிப்பாக, ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால், கடை வீதிகளில் வழக்கமான இயல்பு நிலையில் மக்கள் கூட்டம் இருந்தது. இருசக்கர வாகனப் போக்குவரத்தும் அதிகமாக இருந்தது.
இதேபோல, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. சேலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் மக்கள், கரோனா தடுப்பு அரசின் வழிமுறைகளை கடைப்பிடிக்க தவறினர். குறிப்பாக சமூக இடைவெளியை தவிர்த்தனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொது இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அலட்சியப்படுத்தி கடை வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடி வருகின்றனர். பலர் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. முகக் கவசம் அணிவதில் அலட்சியமாக அரைகுறையாக அணிந்தே நடமாடுகின்றனர். வயதில் பெரியவர்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு, மக்கள் நடமாடியதைக் காண முடிந்தது.
உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, உள்ளாட்சி அமைப்பினர், பொது இடங்களில் கண்காணிப்பை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
708 பேருந்துகள் இயக்கம்