ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறை மீறல் தொடர்பாக 2 மாதத்தில்ரூ.1.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும், என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் எச்சரித்துள்ளார். மேலும், காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி கடந்த இரு மாதங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த 17 ஆயிரத்து 631 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.35 லட்சத்து 26 ஆயிரத்து 200 வசூல் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத 1,607 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 30 ஆயிரத்து 576 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரை 26 ஆயிரத்து 107 இருசக்கர வாகனங்களும், 196 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை ஊரடங்கை மீறியதாக மொத்தம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.