Regional02

இ-பதிவின்றி ஏற்காட்டுக்கு செல்ல அனுமதி : பூங்காக்கள் திறக்காததால் பயணிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துடன் ஒரேமாதிரியான தளர்வுகளுடன் ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறைகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, ஏற்காட்டுக்கு நேற்று பேருந்து சேவை தொடங்கியது. சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 பேருந்துகள் ஏற்காட்டுக்கு இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள், கார்கள் ஆகியவையும் ஏற்காடு செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டிருந்ததால் பயணிகளும், சுற்றுலா சார்ந்த தொழிலை நம்பியுள்ளவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ஏற்காடு மக்கள் கூறும்போது, “ஏற்காட்டில் முக்கிய தொழிலே சுற்றுலா தான். கடந்த 2 மாதங்களாக பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சுற்றுலா தொழிலில் ஈடுபட்டவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர். இப்போது, இ-பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு, பயணிகள் வரத்தொடங்கினாலும், இங்குள்ள பூங்காக்கள், ரோஜாத் தோட்டம், படகு இல்லம் உள்ளிட்டவைகள் திறக்கப்படாததால், பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால்,ஏற்காடு வெறிச் சோடியுள்ளது. எனவே, சுற்றுலா சார்ந்த இடங்களுக்கு பயணிகளை அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

சுற்றுலா துறை அதிகாரிகள் கூறும்போது, “ஏற்காடு, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் பூங்கா திறக்க அரசிடம் இருந்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. இதனால், பூங்காக்கள், படகு குழாம் ஆகியவை மூடப்பட்டுள்ளன” என்றனர்.

SCROLL FOR NEXT