Regional01

நேற்று முன்தினம் பெய்த கனமழையால் - சேலத்தில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது : ஆத்தூரில் 94, தம்மம்பட்டியில் 80 மிமீ பதிவு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. இதனால், சேலத்தில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் இரவு குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை தொடங்கியது, பின்னர் கன மழையாக பெய்யத் தொடங்கி இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது.

இதனால், சேலம் பழைய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, நாராயணன் நகர், பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, நெத்திமேடு, அரிசிபாளையம், லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை, குகை, களரம்பட்டி, சூரமங்கலம் என நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், சேலம் பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது. மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றினர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அத்வைத ஆசிரமம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியின் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்தும் இடம் மழைநீரால் நிரம்பியது.

மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்:

சேலம் 98.2, ஆத்தூர் 94, தம்மம்பட்டி 80, கரியகோயில் -71, பெத்தநாயக்கன்பாளையம் 62, கெங்கவல்லி 50, ஏற்காடு 41, எடப்பாடி 41, மேட்டூர் 30.8, சங்ககிரி 30.2, காடையாம்பட்டி 28.2, வீரகனூர் 27, ஓமலூர் 24மிமீ மழை பதிவானது.சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருநாவுக்கரசர் தெருவில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியது.

படம்: எஸ்.குரு பிரசாத்

SCROLL FOR NEXT