சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகள் கடன் உதவி பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று (5-ம் தேதி) நடக்கவுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் சமூக பொருளா தார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு அனைத்து உதவிகளும் பெற்றிடும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 883 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்திக் கொள்ளும் வகையில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் புதியதாக ரூ.10 ஆயிரம் வரை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கவும், ஏற்கெனவே கடன் உதவி பெற்று முறையாக கடனை திருப்பி செலுத்திய பயனாளிகளுக்கு புதியதாக ரூ.20 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட உள்ளன.
கடனுதவி பெற விருப்பமுள்ள வியாபாரிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் இன்று (5-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வங்கி கடன் உதவி பெற விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள், தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.