மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 616 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த வாரத்தில் நீர் வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக கடந்த 25-ம் தேதி 8 ஆயிரத்து 55 கனஅடி நீர் வரத்து காணப்பட்டது. பின்னர் நீர் வரத்தில் படிப்படியாக சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் விநாடிக்கு 836 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 616 கனஅடியாக குறைந்தது.
நீர் வரத்து குறைந்து விட்டதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிவடைந்து வருகிறது. நேற்று முன்தினம் 82.09 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று 80.85 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 42.80 டிஎம்சி-யாக உள்ளது.