Regional02

சேலம்-கரூர் ரயில் பாதையில் வைக்கப்பட்ட இரும்புப் பலகை - சரக்கு ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு : இருவரை கைது செய்து விசாரணை

செய்திப்பிரிவு

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்புப் பலகை இருப்பதை அறிந்து சரக்கு ரயிலை நிறுத்திய ஓட்டுநரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரும்பு பலகையை வைத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை சரக்கு ரயில் நிலையத்தில் இருந்து, கரூரை அடுத்துள்ள பாளையம் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் நேற்று அதிகாலை புறப்பட்டது.

சேலம்- கரூர் ரயில் பாதையில், சேலத்தை அடுத்த கந்தம்பட்டி அருகே அதிகாலை 2.30 மணியளவில் ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் பலகை போன்ற ஒரு பொருள் கிடப்பதை கவனித்த சரக்கு ரயில் ஓட்டுநர் கோபிநாத், அவசர கால பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.

பின்னர், கீழே இறங்கி பார்த்தபோது, கான்கிரீட் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்புப் பலகை தண்டவாளத்தில் இருந்தது. இதுகுறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இரும்புப் பலகையை அகற்றிவிட்டு அங்கிருந்து ரயிலை இயக்கிச் சென்றார்.

இதையடுத்து சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை, சேலம் ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வெள்ளிப்பட்டறை தொழிலாளிகளான கந்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (32), திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்த செல்வகணபதி (22) ஆகியோர், இரும்புப் பலகையை ரயில் பாதையில் வைத்தது தெரியவந்தது.

இரும்புப் பலகையை திருடிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும்போது, ரயில் அருகில் வருவதைக் கண்டு, தண்டவாளத்தில் வைத்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இரும்பு பலகையை சரக்கு ரயில் ஓட்டுநர் கோபிநாத் கண்டறிந்து அகற்றியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

SCROLL FOR NEXT