தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த காவல் துறையினருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் 340 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோருக்கு பொதுமாறுதல் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 67 காவல் நிலையங்களில் 340 பேர் கொண்ட பொதுமாறுதல் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. எஸ்பி ஜெயக்குமார் தலைமை வகித்தார். காவல் துறையினரின் விருப்பங்களை கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள காலி பணியிடங்களை கணக்கிட்டு பணியிட மாறுதல் வழங்கி எஸ்பி உத்தரவிட்டார்.
கலந்தாய்வு கூட்டத்தில் குழு உறுப்பினர்களாக திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், டிஎஸ்பிக்கள் பொன்னரசு, பிரகாஷ், சங்கர், உதயசூரியன், ஜெயராம், பாலாஜி, கண்ணபிரான், மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.