தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் கரோனா வார்டு பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கி (லிப்ட்) திறப்பு விழா மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் மின் தூக்கி பயன்பாட்டை தொடங்கி வைத்து, 668 பேருக்கு ரூ.1.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசும்போது, “ தேர்தலின்போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நிதி நெருக்கடியை தீர்க்க வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி விரைவில் தீர்க்கப் படும். மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு விளங்கும்” என்றார் அவர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வர் டி.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.