கரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும் எனக் கோரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் உறவினர்கள் மற்றும் குழந்தைகள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். 
Regional02

கரோனா பாதிப்பு காரணமாக - பெற்றோரை இழந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும் : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

செய்திப்பிரிவு

கரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும் எனக் கோரி செங்கை மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், எடையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராசன். இவரது மகன் கதிர்வேலு. இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மனைவி கோமதி மற்றும் மகள் ஷன்மதி (10), மகன் சித்தார்த் (8) ஆகியோருடன் டெல்லியில் வசித்து வந்தார். கடந்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கதிர்வேலு மற்றும் கோமதியும் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது இக்குழந்தைகள் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி உள்ளனர். இரு குழந்தைகளும் தற்போது தாத்தா தேவராசனின் பாதுகாப்பில் இருக்கின்றனர். ஏற்கெனவே இந்த இரண்டு குழந்தைகளும் டெல்லியில் சிபிஎஸ்இ பள்ளியில் படித்ததால் மீண்டும் அதே பாடத்திட்டத்தின்படி படிக்க விரும்புவதாகவும், அதனால் கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்வதற்கு உதவிசெய்யும்படி, மாவட்ட கூட்டுறவுஒன்றியத் தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் உறவினர்கள் மற்றும் குழந்தைகளும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்று கொண்ட ஆட்சியர், குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கு உரிய வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளியில் படிக்க உதவி செய்ய வேண்டும் என ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT