குமராட்சி அருகே பரிவிளாகம் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் முன்னறிவிப்பு இன்றி பொதுமக்கள் அடகு வைத்து கடன் நகைகளை ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கூட்டுறவு வங்கியில் விவசாய தேவைக்காக வாங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்து இருந்தார். அதை நம்பி நாங்கள் நகைகளை மீட்காமல் வைத்திருந்தோம். ஆனால் கூட்டுறவு வங்கி எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நகைகளை ஏலம் விட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துச் சென்றார்.