அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மேற்கொண்ட ஆய்வில் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாதது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து கண்காணிப்பு குழுவினர் உத்தரவிட்டனர். மேலும், சில மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு தொகையை திரும்ப அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெற்றால் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என மருத்துவக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். ராசிபுரத்தில் உள்ள ஒரு பரிசோதனை மையத்தில் கரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள பரிசோதனை மையத்தில் அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை மேற்கொண்டது தெரியவந்தது. உரிய அனுமதி பெறாமல் பரிசோதனை மேற்கொண்டால் பரிசோதனை மையத்தின் அனுமதி ரத்து செய்யப்படும் என மருத்துவக் குழுவினர் எச்சரித்து பரிசோதனையை நிறுத்தினர்.
மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.