Regional01

ஈரோடு மாவட்டத்தில் - டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் இரு மாதங்களுக்குப் பின்னர் 213 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது, என டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் 128 மதுபானக் கூடங்கள் உள்ளன. நாள்தோறும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வியாபாரம் நடைபெறும். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து 2 மாதங்களுக்குப் பின்னர் ஈரோட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (5-ம் தேதி) முதல் மாவட்டத்தில் உள்ள 213 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைத்தும், வட்டங்கள் போடப்பட்டும் வருகிறது.

மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், மதுபானக் கூடங்களுக்கு அனுமதியில்லாததால் அவை மூடப்பட்டிருக்கும், என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT