Regional01

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாளை முதல் - பயணிகள் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க நடவடிக்கை :

செய்திப்பிரிவு

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை (5-ம் தேதி) முதல் பயணிகள் வருகைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் நாளை (5-ம் தேதி) முதல் பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பேருந்துகளை தூய்மைப்படுத்தி இயக்கத்துக்கு தயார் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதவது:

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெளியூர்களுக்கான பேருந்துகள் 1,047-ம், நகர்புற பேருந்துகள் 300-ம் உள்ளன. இப்பேருந்துகள் அனைத்தையும் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்ததால், இன்ஜின்களில் ஆயில் அளவு, டயர்களில் காற்றின் அளவு, பேட்டரிகளில் சார்ஜ் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, அனைத்தும் சரியான அளவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளில் கிருமிநாசினி தெளித்தும், தூய்மைப்படுத்தியும் வருகிறோம்.

பேருந்துகளின் இயக்கம், பிரேக் ஆகியவை சீராக உள்ளதா என்பதையும் சோதித்து தயார்படுத்தி வருகிறோம். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் வருகைக்கு ஏற்ப, பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, சேலத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலும், பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தனியார் பேருந்துகளையும் அவற்றின் உரிமையாளர்கள் தயார்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பட விளக்கம்

நாலை முதல் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்படுவதை முன்னிட்டு, சேலம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்துகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

SCROLL FOR NEXT