சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களாக
நியமனம் செய்ய மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் பிரதிநிதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதில், 21 வகை மாற்றத்திறனாளிகள் கை, கால் இயக்க குறைபாடு உடையவர்கள், தசைச் சிதைவு நோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், குள்ளமானவர்கள், மூளை முடக்குவாதம், தீயினால் மற்றும் திராவகம் பாதிப்பு, குறைந்த பார்வை, பார்வையின்மை, காதுகேளாமை, கேட்பதில் குறைபாடு (அ) கடினம், பேச்சுப் குழறல்கள், மனவளர்ச்சி குன்றியோர், குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, புறஉலகு சிந்தனையற்றவர், மனநலம் பாதிப்பு, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, பல்வகை தண்டுவட மரபு நோய், நடுக்கு வாதம், ரத்த உறையாமை, ரத்த அழிவுச் சோகை, ரத்த குறைபாடு என ஒவ்வொரு பிரிவிலும் மூன்று தகுதியான நபர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கு விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரம், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சலுடன் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் அறை எண்.11, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் என்ற முகவரியில் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.