Regional01

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் - மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு :

செய்திப்பிரிவு

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நிகழ்வாண்டில் (2021) அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

சேலம் மண்டலத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சேலம் மற்றும் மேட்டூர், கருமந்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி மையம் ஆகியவற்றில் உள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வெல்டர், பெயின்டர் (பொது), ஒயர்மேன், உலோக தகடு வேலையாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக், கோபா போன்ற பிரிவுகளுக்கு 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 8 - ம் வகுப்பு கல்வித்தகுதியுடைய தொழிற் பிரிவுக்கு விண்ணப்பிக்க தாங்கள் படித்த பள்ளியில் 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெற்று இரண்டுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முன்னர் செல்போன் எண், மெயில் ஐடி, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ், உயர் கல்வி சான்றிதழ் (இருப்பின்), மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவ, மாணவியர் கையெழுத்து விவரங்கள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ( ஏடிம் கார்டு அல்லது நெட் பேங்க்கிங் மூலம் செலுத்தலாம்). மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசித் தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி , சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பின்னர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்பு பெற்றுத் தரப்படும்.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், சேலம்- 636 007 என்ற முகவரி, 0427– 2401874 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT