சேலம் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களின் மன அழுத்தத்தைப் போக்க மேஜிக், மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், குணமடைந்தவர்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டது.
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கடந்த மே மாதம் 100 படுக்கைளுடன் கூடிய சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கு மூலிகை மருந்துகள், நீராவிப் பிடித்தல், உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்வதற்கான மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, இங்கு கூடுதலாக 100 படுக்கைகளுடன் 2-வது சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்நோயாளியாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்த மேஜிக், மிமிக்ரி மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வ மூர்த்தி தலைமை வகித்தார். சிகிச்சை மைய அலுவலர் மருத்துவர் வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் தொற்று குணம் அடைந்தவர்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இம்மையத்தில் தொற்றுக்காக நேற்று முன்தினம் (2-ம் தேதி) வரை 1,248 பேர், சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். 125 பேர் உயர் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மையத்தில் தற்போது 220 படுக்கைகள் உள்ள நிலையில், 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘இம்காப்ஸ்’ இயக்குநர் மருத்துவர் விவேகானந்தன், மருத்துவ அலுவலர் கவி நாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.