Regional01

நெல்லை அருகே தனியார் சிமென்ட் ஆலையில் - மேலும் ஒரு பைப் வெடிகுண்டு சிக்கியது :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை வளாகத்திலிருந்து மேலும் ஒரு பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டது.

தாழையூத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு கடந்த 22-ம் தேதி தொலைபேசியில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் உதவியுடன் ஆலை வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது 2 பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. தென்கலம் பகுதியிலுள்ள கல்குவாரிக்கு அவை கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இது தொடர்பாக தாழையூத்து போலீஸார் விசாரணை நடத்தி தாழையூத்தை சேர்ந்த ஆறுமுகம் (29), பேட்டை சலீம் (25), மதுரை திருமங்கலத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் பைரவன் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஆறுமுகம், பைரவன் ஆகியோரை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆலையின் மத்திய கட்டுப்பாட்டு அறை அருகே மேலும் ஒரு பைப் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவில் அவர்கள் இருவரையும் ஆலைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்கள் அடையாளம் காண்பித்த இடத்திலிருந்து பைப் வெடிகுண்டை கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT