திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டம்மை நோய் தாக்குதல் அதிகரித்து வருவது தொடர்பாக இந்து தமிழ் நாளிதழில் புகைப்படங்களுடன் விரிவாக செய்தி வெளியானதையடுத்து நோய் பாதிப்பு அதிகம் காணப்படும் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளங்குளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இங்குள்ள செம்மறி ஆட்டுப்பண்ணைகளை ஆய்வு செய்த குழுவினர், கால் மற்றும் சில இடங்களில் புண்கள் இருந்த சில ஆடுகளுக்கு ஆன்டி செப்டிக் கிரீம் மற்றும் மத்தன் தைலம் வழங்கினர். சளி இருந்தால் ஹெர்பல் சப்ளிமென்ட் சிரப், என்ரோ பிளாக்சசின் மாத்திரைகள் ஆடுகளுக்கு வழங்குவதற்காக பண்ணையாளரிடம் கொடுக்கப்பட்டது. மேலும், மருந்தகத்திலிருந்து சளி மருந்து வாங்கி ஆடுகளுக்கு வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
தாயிடமிருந்து குட்டிகளை பிரித்து பசு மாட்டுப்பாலை கொதிக்க வைத்து பின் சூடு தணிந்ததும் புட்டியில் அடைத்துக் கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டது. தோலில் கொப்புளங்கள் தோன்றினால் ஒரு ஸ்பூன் காப்பர்சல்பேட் மற்றும் ஒரு ஸ்பூன் வினிகரை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து தோலில் தெளித்து கழுவ ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது ஆடுகளுக்கு தோலில் கொப்புளங்கள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை ஆய்வாளரின் செல்போன் எண்கள் ஆடு வளர்ப்போரிடம் வழங்கப்பட்டு, எந்த பிரச்சினை என்றாலும் உடனே தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.