உடுமலை கோட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பவர்கிரிட் நிறுவனம் சார்பில் மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமம் முதல் கோவை மாவட்டம், இடையர்பாளையம் வரை 400 கிலோவாட் கொண்டு செல்லும் வகையில் உயர்மின் கோபுரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடுமலை அடுத்த மூங்கில்தொழுவு, கொசவம் பாளையம் கிராமங்களில் 17 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், அவர்களுக்கு சொந்தமான நிலத்தை திட்டப் பணிகளுக்காக கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து உயர் மின் கோபுரங்களில் ஏறி தொடர்புடைய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வெல்கேஷ் கூறியதாவது: விவசாயிகள் நிலஅனுபவ உரிமைக்கான இழப்பீடுகேட்டு கோரிக்கை வைத்தபோது,அறநிலையத்துறையும் இழப்பீடுகோரி மனு கொடுத்துள்ளது. இழப்பீட்டை அறநிலையத்துறைக்குதான் கொடுப்போம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி வட்டாட்சியரால், விவசாயிகளுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறையினர் மேல்முறையீடு செய்துள்ளனர். எனவே, இழப்பீட்டு தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் உடனடியாக வைப்பீடு செய்துவிட்டு, திட்டப் பணிகளை தொடர வேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பவர்கிரிட் நிறுவனம் ஏற்க மறுத்ததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவக்குமார் தலைமையில், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறியும், கீழே பெண்கள் திரண்டுநின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில், 2 வார காலத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படும் என கோட்டாட்சியர் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.