சென்னை பெருநகரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்யதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு காவல் நிலைய தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அதிகாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சீமந்தம்மன் கோயில் பின்புறம் கண்காணிப்பு பணியில் இருந்தனர்.
அப்போது, அங்கு மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் கோயம்பேடு பகுதிக்கு வரும் வியாபாரிகளிடம் கொள்ளையிடுவதற்கு திட்டமிட்டு கத்திகளுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோயம்பேடு 3-வது செக்டார் பகுதியைச் சேர்ந்த மதன்குமார், அவரது கூட்டாளிகள் விக்கி, அருண் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.