மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்களுக்கு சாலை அமைக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
குறைவான மக்கள் தொகை கொண்ட, இணைப்பு சாலை இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்களுக்கு சாலை அமைத்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்துபேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இணைப்பு சாலை இல்லாத மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சாலைகள் அமைக்க ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகளின் மூலம் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில், சாலை அமைப்பதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் முன்மொழிவுகள் அனுப்பி அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மலைவாழ் மக்கள் மற்றும் குக்கிராமங்களில் வாழும் பொதுமக்கள் சாலை வசதிகள் பெறும் வகையில் அனுமதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், 15 நாட்களுக்குள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டும், கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.
எனவே,துறை சார்ந்த அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி குக்கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.