Regional02

பூக்கள் விலை சரிவால் மலர் விவசாயிகள் கவலை :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, வலசையூர், ஆட்டையாம்பட்டி, வீராணம், கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம், பருத்திக்காடு, அயோத்தியாப் பட்டணம், தாரமங்கலம், ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், அரளி, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்களை சேலம் வஉசி மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு தினமும் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வர். வியாபாரிகள் கமிஷன் தொகை எடுத்துக் கொண்டு, விவசாயிகளின் பூக்களை விற்பனை செய்து கொடுப்பது வழக்கம். சுங்கக்கட்டணம், கமிஷன் தொகை, பூக்கள் பறிக்க கூலி, தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட செலவினம் போக, மீதி கிடைக்கும் சொற்ப லாபமே விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற் பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்தாலும், வெளி மாவட்டங்களுக்கு செல்வது, பொது போக்குவரத்து முடக்கம், கோயில், வீட்டு விசேஷ நிகழ்ச்சி, திருமணங்கள் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளதால் பூக்களுக்கான தேவை குறைந்துள்ளது.

இதனால், பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று பூக்கள் விலை குண்டு மல்லி கிலோ ரூ.120, சன்னமல்லி கிலோ ரூ.80 , அரளி கிலோ ரூ.15, நந்தியாவட்டம் கிலோ ரூ.50 என்ற விலைகளில் விற்பனையானது. ஊரடங்கால் மக்கள் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டாத நிலையில், விளைவித்த கூலிக்கு கூட கட்டுப்படியாகாத விலைக்கு பூக்கள் விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT