Regional02

தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15-ம் தேதி கடைசி நாள் : சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என ஆட்சியர் கார்மேகம், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தகுதி உடைய தமிழறிஞர்கள் 01.01.2021-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறை வலை தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT