Regional02

பாலமோரில் கனமழை - தாமிரபரணி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தநிலையில், வெயில் கடுமையாக இருந்தது. குளத்து பாசனத்தில் நடவு செய்யப்பட்ட கன்னிப்பூ நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர்கிடைத்து வந்தன. அதேநேரம் ஆற்றுப்பாசன பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயிகள் கவலையில் இருந்த நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவில் இருந்து மிதமான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 76 மிமீ மழை பெய்தது. சிற்றாறு ஒன்றில் 30 மிமீ மழை பதிவானது.

கன்னியாகுமரி அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் 54 மிமீ மழை பெய்திருந்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,683 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 705 கனஅடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணைக்கு 277 கனஅடி தண்ணீரும் வரத்தாக இருந்தது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.19 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 569 கனஅடி தண்ணீர் ஏற்கெனவே வெளியேற்றப்படும் நிலையில், உபரியாக மேலும் 518 கனஅடி தண்ணீர்திறந்துவிடப்பட்டது. இதைப்போல பெருஞ்சாணி நீர்மட்டம் 70.80 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 290 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு ஒன்று அணை நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து 268 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT