சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கரோனா நோயாளிகளுக்கு 50 நாட்கள் சேவை செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார். 
Regional02

கரோனா வார்டில் 50 நாள் சேவை செய்த - மாணவர்களுக்கு பாராட்டு விழா : சாயர்புரம் போப் கல்லூரி சார்பில் ஏற்பாடு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 50 நாட்களாக சேவை செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேசம் மாணவர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பாக பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

கரோனா நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்தல், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை இம்மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தனர்.

கரோனா தொற்று தற்போது குறைந்ததால் இந்த மாணவர்கள் 50 நாட்கள் சேவையை கடந்த 27-ம் தேதி நிறைவு செய்து வீடுதிரும்பினர். இந்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சாயர்புரம் போப் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் நேசம்மாணவர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பாக பாராட்டு விழா நேற்றுகல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இம்மானுவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது: கல்லூரிப் பருவத்தில் கல்வி கற்பது மட்டுமே உங்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நீங்கள் பெறக்கூடிய பட்டங்கள் தான் உங்களை மிக சிறந்தவர்களாக்கும். நல்ல பழக்க வழக்கங்கள்தான் உங்களை சமுதாயத்தில் சிறந்தவர்களாக எடுத்துக்காட்டும், என்றார் அவர்.

ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தினகரன், பேராசிரியைகள் சாந்தி பொன் இந்திரா, வெல்வெட் கெத்சி மா, கரோலின் டேசி, ஜெமி பிரியா ஆகியோர் செய்திருந்தனர். ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா, உதவி ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT