கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்பு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார். செண்பகராமன்புதூரில் கட்டப்பட்டுள்ள தென்னை மதிப்பு கூட்டுதல்மையத்தில் இயந்திரங்கள் நிறுவும் பணியை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ஊரக்கோணத்தில் அமைந்துள்ள நறுமண வணிக வளாகத்தில் கிராம்பு மொக்கு எண்ணெய், கிராம்பு இலை எண்ணெய், கிராம்பு குச்சி எண்ணெய், சர்வ சுகந்தி இலை எண்ணெய், இஞ்சி இலை எண்ணெய் ஆகியவை தயார் செய்யப்படும் விதத்தை பார்வையிட்டார். கிராம்பு எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மலைத்தோட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் குலசேகரம் ரப்பர் உற்பத்தி நிறுவனத்தில் ரப்பர் ஷீட் தயார் செய்யும் இயந்திரத்தை பார்வையிட்டு, தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். தரமான ரப்பர் ஷீட்களை தயாரித்து தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்து லாபகரமாக செயல்பட அறிவுறுத்தினார். மணலோடை அரசு ரப்பர் கழக இடத்தில் 11.52 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள அன்னாசி பழத்தோட்டத்தை பார்வையிட்டார். பேச்சிப்பாறையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பணிகளையும் ஆய்வு செய்தார்.