திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா (49) மர்மமாக இறந்தது குறித்து போலீஸார் விசாரிக்கிறார்கள்.
அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனி கம்பர் தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி மனைவி சுதா. அம்பாசமுத்திரம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்தார். இவர்களது இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசிக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக வெள்ளப்பாண்டியும், சுதாவும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சுதா வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுதாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டியிருந்தது. ஆலங்குளத்தை சேர்ந்த அவரது உறவினர் நேற்று அங்குவந்து கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது கட்டிலில் அழுகிய நிலையில் சுதாவின் சடலம் கிடந்தது.
இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்குவந்து கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் சடலத்தை கைப்பற்றினர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.