கடலூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலை விவகாரம் தொடர்பாக கடலோர கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பைபர் படகுகள் மற்றும் 500 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. 49 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும் 20 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீனவர்கள் சிலர் மீன் பிடித்து வந்தனர். இதற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து சில மீனவர் கிராமத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அவர்களுடன் பல்வேறு முறை பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனாலும், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் உறுதியாக அந்த வலையை பயன்படுத்தி தான் மீன் பிடிப்போம் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், மீன்பிடி தடைக் காலத்திற்குப் பின்னர் சுருக்குமடி வலையை பயன்படுத்தாமல் மீன் பிடித்தனர். இதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று (ஜூலை 1) அதிகாலையில் மீன்பிடிக்கச் செல்லும் போது சுருக்குமடியை வலையை பயன்படுத்த திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது. இத்தகவல் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நேற்று முன்தினம் (ஜூன் 30) நள்ளிரவு முதலே சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர் கிராமங்களில் போலீஸாரை குவிக்க உத்தரவிடப்பட்டது.
எஸ்பி சக்திகணேசன் மேற் பார்வையில் தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம், அன்னங் கோவில், முசல் ஓடை, எம்ஜிஆர் திட்டி உள்ளிட்ட சில கடலோர கிராமங்களில் சுமார் 300 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன. டிஎஸ்பி கரிகால்பாரி சங்கர் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மீனவர் கிராமங்களில் பதற்றமான சூழல் உருவாகி யுள்ளது.