புவனகிரி அருகே உள்ள நத்தமேட்டில் திரும ணமான 3 நாளில் புதுப்பெண் தற்கொலை கொண்டார்.
புவனகிரி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். விவசாயி. இவரது மகள் மணிமேகலை (27). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்த்து வந்தார். பண்ருட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி(27). இவர் ஐடிஐ படித்து விட்டு வடலூரில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 3 தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் கணவன், மனைவி இருவரும் நத்தமேட்டிற்கு சென்று தங்கி யுள்ளனர். நேற்று முன்தினம் மாலை பண்ருட்டிக்கு புறப்பட கிளம்பியுள்ளனர். அப்போது மணிமேகலை டிரஸ் மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூறி விட்டு அறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். அப்போது மணிமேகலை துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மற்றும் புவனகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.