ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள மீன்கள். படம்:எல்.பாலச்சந்தர் 
Regional02

75 நாட்களுக்கு பின் கடலுக்குச் சென்ற நிலையில் - எதிர்பார்த்த மீன்பிடிப்பு இல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம் :

செய்திப்பிரிவு

ராமேசுவரத்திலிருந்து 75 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எதிர்பார்த்த மீன்பிடிப்பு இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மீன்களின் இனப்பெருக்கத் துக்காக அமல்படுத்தப்பட்ட மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஜூன் 14-ம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் ராமேசுவரம் மீனவர்கள் ஜூன் 30-ம் தேதி மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்தனர். அதன்படி 75 நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இம்மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பினர். இம்முறை எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. மீன்பிடிப்பு குறைவாக இருந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகி ஜேசுராஜா கூறியதாவது: மீன்பிடித் தடைக்காலங்களில் இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் மூலம் அனைத்து ரக வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தனர். இதனால்தான் தற்போது மீன்பிடிப்பு குறைவாக உள்ளது. இனிவரும் மீன்படித் தடைக்காலங்களில் விசைப்படகு மட்டுமின்றி நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்குச் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT