மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட பழுது சீர் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 610 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. விபத்தால் ஏற்பட்ட பழுதுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
தற்போது, பழுது சீரமைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. முதல் பிரிவில் உள்ள இரு அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற இரு அலகுகளிலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.