Regional02

ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைந்ததால் - விவசாய விளைபொருட்கள் விற்பனை தொடக்கம் :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ஏல விற்பனை தொடங்கியுள்ளது.

தமிழக அளவில் கரோனா பரவலில் கோவைக்கு அடுத்த இடத்தில் ஈரோடு மாவட்டம் இருந்து வருகிறது. இருப்பினும், தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே, மஞ்சள் ஏலம் தொடங்கிய நிலையில் தற்போது, அவல்பூந்துறை, பவானி மைலம்பாடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (2-ம் தேதி) முதல் விவசாய விளைபொருட்கள் ஏலம் மூலம் விற்பனை தொடங்குகிறது.

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று கொப்பரைத் தேங்காய் ஏலம் தொடங்குகிறது. இங்கு ஏலத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகிரியில் இன்றும், பவானி மைலம் பாடியில் நாளையும் (3-ம் தேதி) எள் ஏல விற்பனை நடக்கிறது. இதில் பங்கேற்போர் முன்கூட்டியே டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நாளை (3-ம் தேதி) நடக்கும் கொப்பரை ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், பதிவு செய்து கொள்வதோடு, கொப்பரையைத் தரம் பிரித்து எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT