இந்தியாவில் இதுவரை 33 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வரும் போதிலும், அடுத்த சில வாரங்களில் பெருந்தொற்றின் மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்திவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அந்த வகையில், நேற்று ஒரே நாளில் 36 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 33.28 கோடி பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த மாதம் 21-ம் தேதி ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேறு எந்த நாட்டிலும் இதுவரை ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.