நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆராய குழுவை அமைத்து கண்துடைப்பு நாடகத்தை திமுகஅரங்கேற்றுவதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? என்பதை தமிழக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பழனிசாமி தலைமைவகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் சேர்ப்போம் என அறிவித்ததை திமுக நிறைவேற்ற வேண்டும். பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 குறைக்கப்படும் என திமுகதேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள். ஆனால், இதுவரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.
தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என திமுக அறிவித்தது. ஆனால், இப்போது நீட் தேர்வை ரத்து செய்வது குறித்துஆராய குழுவை அமைத்து, கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிஉள்ளது.
இதுதொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வுதொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்துக்கு தெரியுமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தினால்தான், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால்,ஆட்சிக்கு வருவதற்காக பொய்யான வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளது. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? என்பதை தமிழக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அதிமுகவில் ஒன்றரை கோடி பேர் இருக்கிறார்கள். அவர் (சசிகலா) தினமும் 10 பேரிடம் அல்லது ஆயிரம் பேரிடம் கூடபேசட்டும் அதைப்பற்றி கவலையில்லை. அதிமுகவுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மின்வெட்டு இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் ரூ.9 ஆயிரம் கோடி தான் கடனாக இருந்தது. 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ரூ.41 ஆயிரம் கோடியாக கடன்உயர்ந்தது. இதற்கு யார் பொறுப்பு?இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ.செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.