கோவை: கோவை பூச்சியூர் அருகேயுள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில், காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து நாய் ஒன்று உயிரிழந்தது. இதுதொடர்பாக, நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ், முருகேசன் ஆகியோருக்கு, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து, இருவரையும் துடியலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 5 அவுட்டுகாய்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக வெடி வைத்ததாக வழக்கு பதிந்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறும்போது, "அவுட்டுகாய் தயாரிப்பதும், அதைப் பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிலும், 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.