பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். உடன் கோட்டாட்சியர் சரண்யா, வட்டாட்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர். 
Regional01

கால்நடை பூங்கா பணிகளை சேலம் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

தலைவாசல் சர்வதேச கால்நடை பூங்கா கட்டுமானப் பணிகளை சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தலைவாசல் வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், நத்தக்கரையில் செயல்படும் ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதோடு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும், தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

பின்னர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொத்தாம்பாடி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கொத்தாம்பாடி முதல் பழைய சொக்கநாதபுரம் ஆதிதிராவிடர் காலனி வழியாக குறவர் காலனி வரை தார்சாலை அமைக்கும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, கோட்டாட்சியர் சரண்யா, கால்நடை மருத்துவகல்லூரி முதல்வர் இளங்கோ, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் புருஷோத்தமன், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், வட்டாட்சியர் அன்புச்செழியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT