தங்களை முன்களப் பணியாளர் களாக அறிவிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் சார்பில் ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேலும், சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை செயலாளர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ‘சமையல் எரிவாயு சிலிண்டர் தொழிலாளர்களை முன்களப் பணியாளராக அரசு அறிவித்து, முன்களப் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்க வேண்டும்’ என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். மேலும், கோரிக்கை தொடர்பாக சேலம் ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.
இதுதொடர்பாக சங்க மாநிலத் துணைச் செயலாளர் பிரபு கூறும்போது, “மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களை போல, கரோனா தொற்று காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை வீடுகளுக்கு வழங்கி வரும் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். மேலும், முறையான மாத ஊதியம், இஎஸ்ஐ, ஈபிஎஃப் சலுகைகள் வழங்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.
நாமக்கல்
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்ட தலைவர் பாரத் தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி சங்க நிர்வாகிகள் பேசினர்.