கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேகரமாகும் குப்பைகள் பல்வேறுஇடங்களில் கொட்டப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கம்மியம்பேட்டையில் இயங்கி வந்த குப்பை கிடங்கு பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த குப்பைக் கிடங்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் நகராட்சி சுகாதாரத்துறைக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில், திருப்பாதிரிபுலியூரிலுள்ள தனியார் மருத்துவமனை யிலிருந்து கழிவுகள் எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று நகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும்மருத்துவமனை மீது மேல்நடவடிக்கை எடுத்திட மாவட்ட சுகாதாரத்துறைக்கும் நகராட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி தெரிவித்தார்.