மதுரையில் `டோக்கியோவை நோக்கி சாலை' எனும் தலைப்பிலான ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி விழிப்புணர்வு `செல்பி பாயிண்ட்டை' மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார்.
ஜப்பான் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 23 முதல் ஆக.8 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டிப்போட்டியில் மேசைப்பந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.சத்தியன், எ.சரத்கமல், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப்படகுப் போட்டியில் கே.சி.கணபதி, வருண் எ.தக்கர், நேத்ரா குமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் `டோக்கியோவை நோக்கி சாலை' எனும் தலைப்பில் அனைத்து வயதினருக்குமான ஒலிம்பிக் வினாடி- வினா போட்டிகள் ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
இப்போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வயதினரும் https://fitindia.gov.in/ என்ற இணையதளம் மூலம் பங்கேற்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் சுய புகைப்படம் எடுத்துக்கொள்ளும் `செல்பி பாயிண்ட்டை' ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். இந்த வினாடி-வினா போட்டியில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கலந்து கொள்ளலாம்.
விழாவில் முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் நடராஜன், சோலைமதி, மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின், விளையாட்டு விடுதி மேலாளர் கே.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.