‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியால் திருப்பாச்சேத்தி அருகே கீழே தொங்கிய மின் கம்பிகளுக்கு கிராம மக்கள் முட்டு கொடுத்த கம்பை அகற்றிவிட்டு, மின்வாரியத்தினர் மின்கம்பத்தை ஊன்றினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, கானூர், வேம்பத்தூர், பெரியக்கோட்டை, கல்லூரணி, அழகாபுரி, கண்ணாரி ருப்பு, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக மின்கம்பங்கள் பராமரிக்கப் படவில்லை. இதனால் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து விழும் நிலையில் இருந்தன.
மேலும் பல இடங்களில் மின் கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் மின்வாரியத் துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த கண்ணாரிருப்பு விலக்கு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொங்கிய மின்கம்பியால் விபத்து ஏற்படாமல் இருக்க கம்பால் முட்டுக் கொடுத்தனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஜூன் 27-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து மேற்பார்வைப் பொறியாளர் சகாயராஜ் உத்தரவில், மின் கம்பிகளுக்கு கொடுத்திருந்த முட்டுக் கம்பை அகற்றிவிட்டு, புதிதாக மின் கம்பத்தை உதவி மின்பொறியாளர் பாலு தலைமையிலான பணியாளர்கள் ஊன்றினர்.