பள்ளி மாணவர்களுக்கான சீருடை மற்றும் விலையில்லா வேட்டி, சேலை ரகங்கள் மாதிரிக்கு எடுக்கப்பட்டு தரப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
ஈரோடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் மற்றும் கிடங்கில் உள்ள துணிகளின் இருப்பை கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கைத்தறித்துறை செயலாளர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலாராஜேஷ், மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி, ஈரோடு எம்பி கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பினனர் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:
ஈரோட்டில் செயல்படும் கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் அரசின் விலையில்லா சீருடை திட்ட துணிகள் மற்றும் கேரள அரசின் சீருடை துணி சாயமிடும் பணியிலும், அரசு துறைகளான கோ ஆப்டெக்ஸ், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம், கதர் துறை மற்றும் சிறைத்துறைகளிலும் தேவைகளைப் பூர்த்தி செய்தும் வருகிறது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அனுமதியின்படி, ஆலையின் சொந்த நிதியில் இருந்து புதிய ஸ்டெண்டர் இயந்திரம் விரைவில் நிறுவப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் சீருடை துணிகள் உரிய தரத்தில் பதனிடுவதை உறுதி செய்யும் வகையில், சீருடை மாதிரி எடுக்கப்பட்டு தரப்பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. அதேபோல், அரசின் விலையில்லா வேட்டி, சேலை ரகங்கள் மாதிரி எடுக்கப்பட்டு தரப்பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.