தூத்துக்குடி ரயில் நிலையம். படம்: என்.ராஜேஷ் 
Regional03

தூத்துக்குடியை தொடர்ந்து புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே : சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் பாதிப்பு

செய்திப்பிரிவு

தொழில் மற்றும் துறைமுக நகரமானதூத்துக்குடியை, தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நிறுத்தப்பட்ட சேவைகளை உடனேதொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடிக்கான பல சேவைகளை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து சீரடைந்துள்ள போதிலும்,தூத்துக்குடிக்கான சேவைகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கவில்லை.

ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்திவரும், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல் கூறியதாவது: நாகர்கோவில் - கோவை விரைவு ரயிலுக்கு தூத்துக்குடி இணைப்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, கோவில்பட்டி நிறுத்தம் அகற்றப்பட்டுள்ளது. சென்னை- குருவாயூர் ரயிலின் தூத்துக்குடி - இணைப்பு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

பாசஞ்சர் ரயில்

தூத்துக்குடி - மைசூரு விரைவுரயில், சிறப்பு ரயிலாக அறிவிக்கப்பட்டு முதியோர், மாற்று திறனாளிகள், மாணவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்ட அனைத்து சலுகை பிரிவினரின் கட்டண சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணத்துக்கான பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளதால் அவசர பயணம், குறைந்த கட்டணபயண வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளும் அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இயங்கி வரும் இரண்டு முன்பதிவு கவுன்ட்டர்களில் ஒன்றைமாலை நேரத்தில் மூடி வைக்கின்றனர். இந்த நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும்துயரத்தை அனுபவித்து வருகின்றனர். நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். சிறப்புரயில் என்பதை கைவிட்டு, வழக்கமான ரயிலாக இயக்கி, சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.அனைத்து ரயில்களும் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT