தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி யாக உள்ள ஜே.கே. திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திரபாபுவை நிய மித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித் துறையில் 1962 ஜூன் 5-ம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். 1987-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.
தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய அவர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று, சென்னையில் இணை ஆணையராக பணியாற்றினார்.
கோவை காவல் ஆணையராக 2010-11 ஆண்டுகளில் இவர் பணி யாற்றியபோதுதான், சிறுமி மற்றும் அவரது தம்பி ஆகியோரை கொடூர மாக கொலை செய்த குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
வடக்கு மண்டல ஐஜி, லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏடிஜிபி, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தீயணைப்பு துறை ஏடிஜிபியாக இருந்த காலகட்டத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப் பாற்றியது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் இவர் ஆற்றிய பணிகளை மெச்சும் வகையில், குடியரசுத் தலைவர் விருது, பிரதம மந்திரி விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திரபாபு, இன்று காலை 11.30 மணி அளவில் பதவியேற்றுக் கொள்கிறார்.