சாதாரண போனில் மிகக்குறைந்த இணைய அலைவரிசை கிடைத்தால்கூட இயங்கும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவை தொடங்கி அதன்மூலம் மாநிலம் முழுவதும் கற்பித்தலை நிகழ்த்திசாதனை படைத்து வருகிறார் கடலூர் மாவட்டம் கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா. இதில் 1 முதல்8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் ஒலிபரப்பாகின்றன.
இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:
எங்கள் பள்ளி மாணவர்களுக்காக சோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் 10-15 பேர் மட்டுமே கேட்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பரில் கல்வி ரேடியோவை தொடங்கினேன். இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பதிவிட, மற்ற வகுப்பு மாணவர்கள், மற்றபள்ளி மாணவர்களும் ஆர்வம் காட்டினர். இப்போது 75 ஆசிரியர்கள் இந்த வகை கற்றலில் தன்னார்வத்துடன் இணைந்து கற்பித்தலை நிகழ்த்தி வருகின்றனர்.
தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ரேடியோ நேரலையில் இயங்குகிறது. பிளே லிஸ்ட் வசதியும் இருப்பதால், ஒரேபாடத்தை திரும்பத் திரும்பக்கூட கேட்கலாம். சேமித்து வைத்துக்கொண்டு பின்னர் நேரம் கிடைக்கும்போது கேட்டுப் படிக்கலாம். இது மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இணையம் மூலம் படிக்கும்போது டேட்டா அதிகம் செலவாகும். வீடியோ வழியே கற்கும்போது ஒரு நாளுக்கு ஒரு ஜிபிகூட தேவைப்படலாம். தேவையற்ற, ஆபாச விளம்பரங்களின் குறுக்கீடு இருக்கும். ரேடியோவில் அதற்கான வாய்ப்பு இல்லை. தவிர, தனியாக எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவை யில்லை.ஸ்மார்ட்போன் தேவையில்லை. பட்டன் போனில்கூட ரேடியோ வசதி இருந்தால் கேட்கலாம். 2ஜி நெட்வொர்க் போதும்.
கதை சொல்லுதல், பாட்டு, விடுகதை, பொது அறிவு, கலை என மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். இதுவரை 2.25 லட்சம் முறை கல்வி ரேடியோ இணையப் பக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் 13 ஆயிரம் மணி நேரம் பயன்படுத்தியுள்ளனர். தினமும் சராசரியாக 100 மணி நேரம்மாணவர்கள் கல்வி ரேடியோ ஒலிப்பாடங்களை பயன்படுத்துகின்றனர். தமிழகம், புதுச்சேரியில்அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக 40 வாட்ஸ்அப் குழு அமைத்து செயல்படுகிறோம்.
ரேடியோ தொடங்குவதற்காக சேமிப்பகம், விர்ச்சுவல் ஸ்டுடியோ, இணையதளத்தின் பெயர் (www.kalviradio.com), ப்ளே லிஸ்ட் ஆகியவற்றை வாங்கியுள்ளேன். சொந்தப்பணத்திலும், சிலரது பங்களிப்பையும் சேர்த்து ஆன்லைன் கல்வி ரேடியோவை நடத்துகிறேன். பள்ளிகள் திறந்துவிட்டால் இதை தொடர்வது கடினமாக இருக்கும். இதற்கென அரசு தனிக் குழு அமைத்து செயல்படுத்தினால், 12வகுப்புகளுக்கும் 12 தனித்தனிரேடியோக்களை உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் தகவல்களுடன் முழுசெய்தியை ‘இந்து தமிழ் திசை’யின் https://www.hindutamil.in/news/tamilnadu/687454-education-for-all-at-the-lowest-cost-kalvi-radio.html பக்கத்தில் வாசிக்கலாம்.
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in