சேலம் (ஊரகம்) மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் ஜருகுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினர். 
Regional02

ஜருகுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை :

செய்திப்பிரிவு

சேலம் ஜருகுமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கையை மாவட்ட கல்வி அலுவலர் நேற்று தொடங்கி வைத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜருகுமலையில், கடந்த 1965-ம் ஆண்டு அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. சாலை வசதி இல்லாமல் இருந்த ஜருகுமலைக்கு தற்போது தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜருகுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை 103 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் இப்பள்ளிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று ஜருகுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது.

சேலம் (ஊரகம்) மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று பள்ளிக்குச் சென்று பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினர். பின்னர், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆலோசனை நடத்தினார். பள்ளி சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், அனைத்து ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில், மலையில் இயங்கி வரும் பள்ளியின் முன்னேற்றத்திற்காக அவர் அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, அவர்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர், பள்ளியின் அங்கன்வாடிக்கு சென்று அங்கு சமையல் பொருட்களின் தூய்மை, பாதுகாப்பு, இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 56 ஆண்டுகளில் முதன் முறையாக, தற்போது கல்வித்துறை அதிகாரிகள் ஜருகுமலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT