Regional02

கூட்டுறவு பெட்ரோல் பங்குக்கு ரூ.7 லட்சம் பாக்கி : செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் மீது புகார்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க் செங்கல்பட்டு நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு, நகராட்சி வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டரை இயக்க டீசல், பெட்ரோல் வாங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வாகனங் களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

பணியிடை நீக்கம்

இந்நிலையில், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் ரூ.7 லட்சம் பாக்கி வைத்திருப்பதாகவும், இந்தக் கட்டணத்தை செலுத்தும்படி பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், நகராட்சி நிர்வாகம் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மண்டல நகராட்சிகளின் இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம், பெட்ரோல், டீசல் பாக்கியை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓரிரு வாரங்களில் கட்டண பாக்கியை நகராட்சி நிர்வாகம் செலுத்தவில்லை எனில்,நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல் நிரப்பியதற்கு முறையான ரசீதுகளை அவர்கள் வழங்கவில்லை. மேலும், தணிக்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், நகராட்சியில் போதிய நிதி இல்லாததாலும் கட்டண பாக்கியை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT