காரைக்குடியில் முதல் மனைவிக்கு தலாக் சொல்லிவிட்டு 2-வது திருமணம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்த ஆபிதாபானுவுக்கும் (27), மதுரை ஹனீப் இப்ராஹிம்மின்ஹால் (39) என்பவருக்கும் 2015-ல் திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆபிதா பானுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவரும், குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தினர். இது குறித்த புகாரில் 2019-ல் காரைக்குடி மகளிர் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆபிதாபானுவிடம் நேரிலும், கடிதத்திலும் ஹனீப் இப்ராஹிம்மின்ஹால் தலாக் சொல்லி உள்ளார். அதன் பிறகு, கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த ஆமின்மின்னா (24) என்பவரை ஹனீப் இப்ராஹிம்மின்ஹால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த ஆபிதாபானு காரைக்குடி மகளிர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஹனீப் இப்ராஹிம்மின்ஹால் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தந்தை நூர்முகமது மீரா (55), தாயார் சிட்டிமர்ஜான் (50), ஜமாத் தலைவர் அஸ்ரப் அலி (60) உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து ஹனீப் இப்ராஹிம்மின்ஹாலை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.