திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி ஒப்பந்த ஏலம் நாராயணபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தை விடுவதற்காக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம் அங்கு வந்தார்.
அப்போது, நாராயணபுரம், திம்மாம்பேட்டை, அலசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்கள் மீன்பிடி ஏலம் நடத்தக்கூடாது, பழமையான ஏரியை தூர்வாரி, ஏரியை புனரமைக்க வேண்டும் எனக்கூறி துணை பிடிஓ சதானந்தத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏலம் எடுக்க வந்தவர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய துணை பிடிஓ சதானந்தம் நாராயணபுரம் ஏரியில் மீன்பிடி காலம் முடிந்தவுடன், நிச்சயமாக ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்கள் சீரமைக்கப்படும். ஏரிக் கரைகள் பலத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனையேற்று, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். அதன்பிறகு, நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடி ஒப்பந்த ஏலம் நடைபெற்றது.