Regional02

கடையை சூறையாடியதாக இருவர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் தயாளன். இவரது நண்பர் பிரபு. இவர்கள், இருவரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரேயுள்ள ஒரு உணவகத்துக்கு சென்றனர். அப்போது, உணவக ஊழியரிடம் சிக்கன் ஃப்ரையுடன், சேமியா வேண்டும் எனக்கேட்டனர்.

அதற்கு, பிற்பகல் நேரம் என்பதால் பிரியாணி மட்டுமே உண்டு, அதுவும் பார்சலில் வழங்கப்படும். சிக்கன் ஃப்ரை, சேமியா மாலையில் வழங்கப்படும் என உணவக ஊழியர் கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இதனை தடுக்க வந்த உணவக உரிமையாளர் முகமதுசாதிக் மற்றும் ஊழியர் சர்தாரை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலானது.

இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் உணவக உரிமையாளர் முகமதுசாதிக் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தயாளன், பிரபு ஆகியோரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT